பருவமழை தொடங்கவுள்ள நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். காலாப்பட்டிலுள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு இன்று ஆய்வுக்கு சென்ற கிரண்பேடி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியிலும், கல்லூரி விடுதியிலும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை, அவற்றை நிறைவேற்றி தாருங்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு கிரண்பேடி, தான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாகத்தான் ஆய்வுக்கு வந்ததாக கூறினார். 'எல்லா இடத்தையும் பார்வையிடுகிற நீங்கள் எங்கள் பிரச்சனையும் பார்த்து சரி செய்து கொடுங்கள்" என தொடர்ந்து வலியுறுத்தினர்.
அவர்களுக்கு பதில் சொல்லாத கிரண்பேடி அங்கிருந்து காரில் புறப்பட்டார். அதேசமயம் காரை விரட்டி வந்த மாணவர்கள் கிரண்பேடியின் காரை மறித்தும், வாயிற்கதவை பூட்டியும் முழுக்கங்கள் எழுப்பினர். அப்போது கிரண்பேடி பொதுமக்கள் குறைதீர்க்கும் நேரத்தில் ஆளுநர் மாளிகையில் தன்னை வந்து சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறினார். ஆனாலும் மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை. காவல் துறையினர் நெருக்கடி கொடுத்து மாணவர்களை கலைந்து போக செய்தனர். அதன்பின்னர் கிரண்பேடியின் கார் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறியது. ஆய்வுக்கு சென்ற ஆளுநரை மாணவர்கள் சிறை வைத்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.