இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 21 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 அனல் மின் நிலையங்களும், பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல் மின் நிலையங்களும், கேரளா மாநிலத்தில் 4 அனல் மின் நிலையங்களும் நிலக்கரி தட்டுப்பாடால் மூடப்பட்டுள்ளன. மேலும் சில மாநில அரசுகள் மின் வெட்டு ஏற்படலாம் என தங்கள் மாநிலத்தில் வசிப்பவர்களை எச்சரித்துள்ளனர்.
மேலும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தேவையான நிலக்கரியை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசு, நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றும் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறி வருகிறது. அதேநேரத்தில் சீனாவிலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்தநாடும் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகவும், இதனால் கூடுதலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் இந்தியாவின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் மழை காரணமாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "மழை காரணமாக, நிலக்கரி பற்றாக்குறை இருந்தது. அதனால் சர்வதேசச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை 60 ரூபாயிலிருந்து 190 ரூபாயாக அதிகரித்தது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தும் மின்நிலையங்கள் 15-20 நாட்கள் மூடப்பட்டன. அல்லது குறைவாக மின் உற்பத்தியைச் செய்தன. இது உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. நேற்று நாங்கள் 1.94 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தோம். இது இதுவரை இல்லாத அளவிற்கான அதிகபட்ச நிலக்கரி விநியோகமாகும். மாநிலங்களைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டு ஜூன் வரை தங்களது கையிருப்பை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். சிலர் (சில மாநிலங்கள்) 'தயவுசெய்து ஒரு உதவி செய்யுங்கள், டான் இப்போது நிலக்கரியை அனுப்ப வேண்டாம்' எனக் கூறுகின்றனர். கடந்த கால நிலுவை இருந்தபோதும் நிலக்கரி விநியோகத்தைத் தொடர்ந்தோம். கையிருப்பை அதிகரிக்கும்படி மாநிலங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நிலக்கரி பற்றாக்குறை இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.