ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் இணையம் மூலம் விவேக் சர்மா என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் விவேக் சர்மா அந்த மாணவியை ஓட்டலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று ஓட்டலுக்குச் சென்ற மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதை செல்போனிலும் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி அந்த மாணவியை பல முறை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வன்கொடுமை செய்த கும்பலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோக்ரிலால் என்பவரது மகன் தீபக் என்பவரும் அடக்கம். ஆனால், அவரது பெயரை பட்டியலில் இருந்து காவல்துறை நீக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எம்.எல்.ஏ மகன் பெயர் விடுபட்டதை போக்சோ நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.எல்.ஏ மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல்துறையினருக்கு 17 முறை பிடிவாரண்ட் அனுப்பியும் அவர் கைது செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனிடையே பாஜகவினரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ மகன் தீபக்கும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். தீபக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.