டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீஸார், அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களையும், மாணவிகளையும் கொடூரமாக தாக்கியது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை தூண்டியிருக்கிறது. பல்கலைக்கழகத்திற்குள் துணைவேந்தர் அனுமதி இல்லாமல் போலீஸ் நுழைந்தது எப்படி என்று ஜாமியா மில்லியா துணைவேந்தர் வினா எழுப்பியிருக்கிறார்.
“மாணவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். பல்கலைக் கழகத்திற்கு வெளியே பத்தாயிரக்கணக்கில் மக்கள் போராடுகிறார்கள். போலீஸோ, 10 மாணவர்களை விரட்டிக்கொண்டு பல்கலைக்கழகத்திற்குள் வந்து அடித்து நொறுக்குகிறது. நாங்கள் இந்தஅட்டூழியம் குறி்த்து போலீஸில் புகார் செய்வோம். விரிவான விசாரணை கோருவோம்”என்று ஜாமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறியிருக்கிறார்.
அதேசமயம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர், போலீஸ் உதவியை கேட்டதாக தெரிவித்துள்ளார். பாஜக அரசு விரும்பி நியமித்த இரண்டு துணைவேந்தர்களின் நிலை இப்படி இருக்கிறது.
ஜாமியா பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸாரின் நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.