காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 135 ஆவது ஆண்டு விழாவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், ராணுவ தளபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத், "மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல" என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்தும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் பேசிய ப.சிதம்பரம், "அமித் ஷா திரும்பிச் சென்று மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நடந்த விவாதங்களை மீண்டும் பார்க்க வேண்டும். அவர் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, இப்போது அவர் ராகுல் காந்திக்கு இது குறித்த விவாதிக்க தயாரா என சவால் விடுகிறார். இந்தச் சட்டத்தில் எல்லாமே தவறாக உள்ளது. டிஜிபி மற்றும் ராணுவ தளபதி அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது ஒரு அவமானம். நீங்கள் ராணுவத்தின் தளபதியாக இருக்கிறீர்கள், உங்கள் வேலையை கவனமாக பாருங்கள். ஒரு போரை எவ்வாறு நடத்துவது என்று உங்களுக்குச் சொல்வது அரசியல்வாதிகளின் வேலை இல்லையோ, அதேபோல அரசியல்வாதிகள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ராணுவத்தின் வேலை அல்ல" என தெரிவித்துள்ளார்.