பீகார் மாநிலம், ரோத்தஸ் மாவட்டத்தில் உள்ள திவாரியா கிராமத்தைச் சேர்ந்த நாதுனி பால்(50). இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் காணாமல் போய்விட்டதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், நாதுனி பாலை உறவினர்கள் 4 பேர் கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்தனர். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், உறவினர்களான ரதி பால், விம்லேஷ் பால், பகவான் பால் மற்றும் சத்யேந்திர பால் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவர்கள் 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக நீதிமன்ற ஜாமீனில் இருந்த அவர்கள், அதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். நாதுனி பால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாததால், இந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி நகரில் சந்தேகமுள்ள ஒரு நபர் வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், அந்த இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரிக்கையில், பீகாரில் கொலை செய்யப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்ட நாதுனி பால் என்பதும், பீகாரில் இருந்து வந்த 16 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர், 17 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.