உத்தரப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சுரங்கத்தில் பணியாற்றும் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது குறித்து வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தின் சித்ரகூட் பகுதியில் நூற்றுக்கணக்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்படும் சுரங்கங்களாக உள்ளன. இப்படி அனுமதி பெறப்படாமல் நடத்தப்படும் சில சுரங்கங்களில், அங்கு பணியாற்றும் பழங்குடியின சிறுமிகளை அச்சுரங்கத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்தச் சுரங்க விவகாரம் குறித்து உ.பி அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வரும் சூழலில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "சித்ரகூட் பகுதியில் பழங்குடியின சிறுமிகள் அனுபவித்து வரும் வேதனை மிகக் கொடுமையானது. திட்டமிடல் ஏதுமின்றி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்தச் சிறுமிகள், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாம் கனவு கண்ட இந்தியா இதுதானா?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.