ஆந்திர மாநில முதல்வராக பதவியற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதே சமயம் அரசு நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் அமராவதியில் கட்டப்பட்ட "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க உத்தரவிட்டார். இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் குழந்தையின் தாய்க்கு ஆந்திர அரசு சார்பில் ரூபாய் 15,000 வழங்கப்படும் எனவும், 50 வீடுகளுக்கு ஒரு ஏஜெண்ட் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்கான உத்தரவை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிறப்பித்தார்.
ஆந்திர விவசாயிகள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குண்டூரில் உள்ள தனது அலுவலகத்தில் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஜெகன் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு இன்று முதல் பகல் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்காக மாநில அரசு உனடியாக சுமார் 1,700 கோடியை விடுவித்துள்ளது என்று கூறினார். விவசாயத்திற்கு இது வரை இரவு 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால், பலர் பாம்புக்கடி, விஷக்கடிகளுக்கு ஆளாகி அதிக விவசாயிகள் இறந்துள்ளனர் எனவும், அதன் காரணமாகவே பகல் 9 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம் என்று அறிவித்ததாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெகன் அறிவிப்பு காரணமாக ஆந்திர மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.