மத்திய மோடி அரசின் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. கரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவது குறித்தும், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை குறித்தும் மத்திய அரசை நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசை கடுமையாக சாடி வருகிறார் ராகுல். கடந்த 2 நாட்களில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரழிவை ஏற்படுத்தும் கரோனா பரவலின் இரண்டாவது அலை வீசும் நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வுகள் நடத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பின்மை அதிகமாகியிருக்கிறது. எத்தனை காலம்தான் இளைஞர்களின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடப் போகிறது?
கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் முடியவில்லை. இரண்டாவது அலையை தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் இல்லை; தடுப்பூசிகளும் இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பில்லை; வேலைவாய்ப்புகளும் இல்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதியாக இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.