Skip to main content

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு புது வியூகம்!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் விற்க மத்திய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், முந்தைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் சுமார் 76% விழுக்காடு பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது. ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை. இதன் காரணமாக பங்குகளை தற்காலிகமாக விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.

 

 

 

AIR INDIA

 

 


இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில்,  2014-2019 ஆம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட திட்டங்கள், நிலுவையில் உள்ள சட்டங்கள் என அனைத்தையும் மீண்டும் கையில் எடுக்க பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பங்குகளை விற்பனை குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது எனவும், இனி ஏர் இந்தியா பங்குகளை விற்பதில் சிக்கல் இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளை விற்பனை செய்யும் அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்