கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியை சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே. இவர் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சராக உள்ளார். குடகு மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், 'சமீபத்தில் சபரிமலையில் இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்தனர். இது இந்துக்களின் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை போன்றது. சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்துவிட்டது. மேலும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்து பெண்கள் மீது யாராவது கை வைத்தால், அவர்கள் கையை வெட்டுங்கள்' என கூறியுள்ளார். இந்த கருத்து பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கர்நாடக பாஜக, 'இது பாஜக வின் கருத்து கிடையாது. அவரின் தனிப்பட்ட கருத்து. இதனை பாஜக வின் ஒட்டுமொத்த கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது' என அறிவித்துள்ளது.