ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நேற்று இரவு 7.10 மணியளவில் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் நின்றுகொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் தெரிவிக்கையில், “விபத்தில் படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 4 மணிக்குள் தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிந்துவிடும். ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பாதையில் இயக்கப்பட இருந்த 22 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிஸ்வஜித் சாகு தெரிவிக்கையில், “விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் சுமார் 100 பயணிகள் இருந்தனர். விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலையும் மீறிச் சென்றதால் இவ்விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.