இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.
அதேபோல் பல்வேறு சட்டங்கள், கடும் அமளிக்கு இடையே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த பரிந்துரைத்துள்ளது.
பணவீக்கம், விவசாயிகள் பிரச்சனை, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால், மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இந்த குளிர்கால கூட்டத்தொடரும் பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.