புதுச்சேரி முதலியார் பேட்டையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த மண்டல அலுவலகத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 6 கிளை அலுவலகங்கள், 2 இ.எஸ்.ஐ மருந்தகம், ஒரு மருத்துவமனை ஆகியவை இயங்கிவருகின்றன.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் இவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்தின் கீழ் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், மருத்துவக் காப்பீடு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி இ.எஸ்.ஐ அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக சென்னை சி.பி.ஐ அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து நான்கு பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று (28.07.2021) மதியம் புதுச்சேரி இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்துக்கு 2 கார்களில் வந்தனர். கார்களைக் கேட்டுக்கு வெளியே நிறுத்தி, அதிலிருந்து இறங்கிய அதிகாரிகள் அலுவலகத்தினுள் சென்றனர். அலுவலக தரை தளத்தில் வாயில் அருகே பணியில் இருந்த இரண்டு தனியார் செக்யூரிட்டிகளுக்கு வருவது சி.பி.ஐ அதிகாரிகள் என தெரியவில்லை. அதனால் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்லுமாறு அவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள், “சி.பி.ஐ அதிகாரிகள் வந்துள்ளோம். வந்து சொல்கிறோம்” என கூறி, முதல் தளத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முதலாவதாக அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். பின்னர் கதவுகளை இழுத்து மூடினர். யாரையும் உள்ளே வெளியே அனுமதிக்கவில்லை. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையில், ஒரு தொழிற்சாலை நிறுவனத்திடமிருந்து ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 பேர் சிக்கினர். தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அங்கிருந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட அனைத்தையும் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இரவு 7.25 மணி வரை சோதனை நீடித்தது. சோதனை முடிந்து லஞ்ச மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மண்டல துணை இயக்குநர் பெட்ராஸ், சமூக பாதுகாப்பு அதிகாரி மோஹித் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் இருவரையும் தாங்கள் வந்த கார்களில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச் சென்றனர். ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய திடீர் அதிரடி சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.