பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்யும் வகையில் 'பசு பாதுகாப்பு அமைச்சகம்' அமைக்கப்படுவதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்கள் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, பசுக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருங்காலத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 'பசு பாதுகாப்பு அமைச்சகம்' அமைக்கப்படுவதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதுதொடர்பான தனது ட்விட்டர் பதிவில், "மத்தியப் பிரதேச மாநிலத்தில், பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும். இதற்கான முதல் கூட்டம் நவம்பர் 22 ஆம் தேதி, அகர் மால்வாவில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.