கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஏழாவது நாளாக இன்றும் (05.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது எனக் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 405 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 205 பேரைக் காணவில்லை எனக் கேரளா அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 2000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலம்பூர் மற்றும் சாலியாறு பகுதிகளில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அழுகிய நிலையில் மீட்கப்படும் சடலங்கள் நிலம்பூர் பகுதியிலேயே அடக்கம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புத்துமலைக்கு அருகே 38 சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவருவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.