
பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு இன்று (02.10.2023) வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொது பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.
மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும். பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.