இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வினால், விலைவாசி உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் உத்தப்பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஒருவர், 95 சதவீத இந்தியர்களுக்குப் பெட்ரோலே தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உபேந்திர திவாரி, "பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் பொறுத்தவரை, இப்போது நான்குசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் ஒரு சிலரே. அவர்களுக்கே பெட்ரோல் தேவை. தற்போது, சமூகத்தில் 95 சதவீத மக்களுக்குப் பெட்ரோல் தேவையில்லை' என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உபேந்திர திவாரியின் இந்தக் கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, "பெட்ரோல் ஒன்றும் விலை உயர்வானது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கரோனா தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுகிறீர்கள். கரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.