ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் இறுதி சடங்கை அவரது குடும்பத்தினர்தான் செய்தனர் என பாஜக ஐடி பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். அப்பெண்ணின் உடல் தங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு காவல்துறையினரால் இறுதி சடங்கு செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் ஹரியானா ஐடி பிரிவு தலைவர் அருண் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கை அவரின் குடும்பத்தினரே செய்தார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இறந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரின் சம்மதத்துடனேயே இந்த இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி தெரியாத சூழலில், அதில் ஒரு வயதானவர் உட்பட கிராம மக்கள், இறுதி சடங்கு செய்வதுபோல் காட்டப்பட்டுள்ளது.