கேரளா வயநாடு தொகுதியோடு, பாலக்காடு சட்டமன்றத் இடைத்தேர்தலும் நவம்பர் 13ஆம் தேதியில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், போட்டியிடும் பா..ஜ.க வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், திருச்சூர் பூரம் திருவிழா குளறுபடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது பேச்சு கொச்சைப்படுத்துவது உள்ளதால், சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சேலக்கரை தொகுதிச் செயலாளர் அனுப், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு ஆம்புலன்ஸில் சென்றதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது ஏற்கெனவே 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.