காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கே மைக் பிடித்து பேசிய ராகுல் காந்தி, “பல்கலைக்கழக நிர்வாகிகளை அழைத்து பலகலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியுள்ளது. ராகுல் காந்தி ஏன் இங்கு வந்து பேச வேண்டும் என்பது முக்கியம் அல்ல; ஆனால் யாருடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்புகிறார்களோ, அவர்களது பேச்சைக் கேட்க மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து கவ்ஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.