நிதி மேலாண்மைக்காக தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வராக மதஜ தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை பொதுத்துறை அதிகாரிகள் உடனான சந்திப்பை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். அதேசமயம், விவசாய சங்கங்களை சந்தித்த போது, நிதி மேலாண்மையில் கவனம் செலுத்துவது குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து நிதி மேலாண்மை குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் அரசுத்துறைகள், அலுவலகங்கள் மற்றும் ஏஜென்ஸிகள் முன்வைக்கும் நிதித்திட்டங்களை அரசு அதிகாரிகள் முறையாக பரிசீலனை செய்யவேண்டும். புதிய கார்கள் வாங்குவது, அலுவலகங்கள், கட்டிடங்கள் புதுப்பிப்பது, மராமத்து செய்வது போன்றவற்றை முடிந்தளவுக்கு தவிர்த்து நிதி மேலாண்மைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அதேபோல், கடந்த ஜூன் 1ஆம் தேதி பேசுகையில், அரசு அதிகாரிகள் அரசு முறைக் கூட்டத்தின்போது செல்போன்களை அணைத்துவைக்க வேண்டும். அதனால், கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.