கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும், உலகத் தலைவர்களும் தனது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.
அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு இரயில் கோர விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ள தகவல் பேரதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமுற்றவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவுக்கு உள்ளது; இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்; இந்த கடினமான தருணத்தில் கனடா இந்தியாவிற்கு துணை நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.