உத்தரகாண்டிலுள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். ஆண்டுதோறும் இந்துக்கள் இந்த நான்கு தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த யாத்திரையை உத்தரகாண்ட் அரசு இந்த வருடமும் நடத்த முடிவெடுத்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், இதற்கு தடை விதித்தது. அதேநேரத்தில் இந்த யாத்திரையை (யாத்திரையின் போது நடத்தப்படும் பூஜைகளை) நேரடி ஒளிபரப்பு செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் உத்தரகாண்ட் அரசு, சார் தாம் யாத்திரையை நேரடி ஒளிப்பரப்பு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "எல்லா பரிந்துரைகளையும் கேட்ட பின்பு, வேதத்தில் எழுதப்படவில்லை என்பதால் சார் தாம் யாத்திரை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவுள்ளோம்" என கூறியுள்ளார்.