ரஃபேல் போர்விமானங்களைத் தயாரித்த டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி இன்னும் இந்தியாவுக்கு ரஃபேல் தொழில்நுட்பங்களை வழங்கவில்லை என சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016 -ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, அண்மையில் இறுதிசெய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இந்தியாவிற்கு ஐந்து ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்ஸ் உறுதி அளித்திருந்தது. ஆனால், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், ஜூலை மாதம்தான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அண்மையில், இந்த ஐந்து விமானங்களும் முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இந்நிலையில், ரஃபேல் போர்விமானங்களைத் தயாரித்த டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி இன்னும் இந்தியாவுக்கு ரஃபேல் தொழில்நுட்பங்களை வழங்கவில்லை என சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், "ஒப்பந்தத்தின்படி, டசால்ட் நிறுவனம் ஏவுகணை மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பங்களை இன்னும் இந்தியாவுக்கு வழங்கவில்லை. அதேபோல மற்றொரு விமானமான தேஜஸுக்கு உரிய என்ஜின் தொழில்நுட்பத்தையும் பிரான்ஸ் நிறுவனம் இன்னும் வழங்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் ஒப்பந்தத்திற்கான உரிய பலன் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை எனவும், எனவே ரஃபேல் விமான தொழில்நுட்பங்களைப் பெறுவது தொடர்பான கொள்கை மற்றும் அமலாக்கம் குறித்து, பாதுகாப்புத்துறை மறு ஆய்வு செய்யவேண்டும் எனவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தை சி.ஏ.ஜி மறுஆய்வு செய்யப் பரிந்துரைத்திருப்பது தற்போது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.