நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தம். சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தில் அபாரதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு அதிகமான அபராத தொகை விதிக்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் விவசாயி ஒருவரின் மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்துள்ள போக்குவரத்துக்கு காவலர்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் டேராடூன் புறநகர் பகுதியில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் ஹாசன். இவர் கடந்த சனிக்கிழமை, தனது மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார் தலைமையிலான காவலர்கள் மாட்டுவண்டிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து ரசிது வழங்கியுள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டுவண்டிக்கு அபராதம் விதிக்க எந்த விதியும் இல்லாத நிலையில், இதனால் குழப்பமடைந்த ரியாஸ், காவல்துறையை அணுகியுள்ளார். இதனையடுத்து அந்த ரசீதை ரத்து செய்வதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பின்னர் இதுபற்றி கூறிய காவல்நிலைய அதிகாரி கூறும்போது, ’’ரியாஸின் மாட்டுவண்டி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தே அபராதம் விதித்தோம். மாலை நேரம் இருட்டாக இருந்தால், அடையாளம் தெரியாமல் பில் புக் மாறிவிட்டது. புதிய மோட்டர் வாகன பில் புக்கில் இருந்து அபராதம் விதித்தோம்’’ என்றார்.