உத்தரப்பிரதேஷ மாநில தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக அகில இந்திய அளவில் தலைமை நிர்வாகிகளை அடியோடு மாற்றினார். அதில் ஒரு பகுதியாக தனது உறவினர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக தனது சகோதரர் ஆனந்த் குமாரையும், தனது மருமகனை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷ் ஆனந்தையும் நியமிப்பதாக மாயாவதி அறிவித்தார்.
மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை குழுத்தலைவராக உத்தரபிரதேச மாநில ஆரோஹா மக்களவை தொகுதி எம்பி தனீஷ் அலியை நியமித்தார். அதே போல் மக்களவை கொறடாவாக கிரிஷ் சந்திராவை நியமித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து விமர்சித்த பாஜக கட்சி காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளை போல் மாயாவதியும் குடும்ப அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.