உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 760 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 17 மாநகராட்சி மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 17 மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் ஒரு மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பதிவில், "உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பல முறைகேடுகளுடன் வெற்றி பெற்றுள்ளனர். நேரம் வரும்போது பாஜக அதற்கான பின்விளைவுகளை நிச்சயம் சந்திக்கும். இது குறித்த பிரச்சனையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கப் போவதில்லை.
மேலும், அனைத்து பாதகமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியை நம்பி அதன் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்தத் தேர்தலும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் மேயர் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருக்கும். பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, சமாஜ்வாதி கட்சியாக இருந்தாலும் சரி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவதில் இரு கட்சிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. எப்பொழுதும் ஆளுங்கட்சி அதிக இடங்களில் மோசடி செய்து வெற்றி பெறுகிறது. இந்த முறையும் அதுதான் நடந்தது" என்று தெரிவித்துள்ளார்.