பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1.76 லட்சம் பேர் பணியாற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சுமார் 1.06 லட்சம் பேர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற விரும்புவோர் டிசம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணியாற்றிய ஆண்டுகளில் ஓராண்டுக்கு 35 நாட்கள் ஊதிய வீதமும், விருப்ப ஓய்வுக்கு பின்னர் மீதமுள்ள பணி நாட்களுக்கு ஓராண்டுக்கு 25 நாட்கள் ஊதியம் வீதமும் ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
53.5 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு அறிவிக்கும்பட்சத்தில் அவர்களது சம்பளத்தில் 125 சதவீதமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 80 முதல் 100 சதவீத சம்பளமும் இதன்படி வழங்கப்படும். இந்த திட்டத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பணியாளர்கள் வரை ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.