திண்டிவனம் அருகே கோயில் அர்ச்சகர்களாக பணியாற்றிய சகோதரர்கள் இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வடக்கு மாட வீதியை சேர்ந்த செல்லப்பன் (78) மற்றும் அவரது அண்ணன் சுவாமிநாதன் (86), இருவரும் திண்டிவனம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள அரசரடி விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பூஜை செய்து வந்துள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் செல்லப்பன் நேற்று முன்தினம் 3:30 அளவில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரது அண்ணன் சாமிநாதனிடம் அவரது உறவினர்கள் தெரிவித்துவிட்டு, செல்லப்பன் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் சாமிநாதன் நேற்று முன்தினம் அதிகாலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் அண்ணன் தம்பி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருவரது உடல்களும் திண்டிவனம் சலாவதி ரோட்டில் உள்ள நகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது அண்ணன், தம்பி இருவரும் வயது மூப்பின் காரணமாக இருந்திருந்தாலும்கூட இருவரும் ஒரே நாளில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.