இன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கக் கூடிய பழக்கம் என்பது முற்றிலும் குறைந்துள்ளது. முழுமையான எழுத்தறிவு கொண்ட கேரளாவில் கூட புத்தகங்களை விட்டுட்டு செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையை நூலகமாக மாற்றியுள்ளார் அதன் ஊழியரான ஜெயக்குமார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரேதப் பரிசோதனை அறையில் ஃபாரின்ஸிக் மருத்துவ அறிவியல் ஜுனியர் லேப் அலுவலராக, மணிகண்டேஸ்வரம் போற்றி கோணத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (53) பணிபுரிந்து வருகிறார். 4 அறைகளை கொண்ட அங்கு ஒரு அறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஜெயக்குமார் வாங்கி வைத்துள்ளார்.
விபத்தில் பலியானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் பிணங்களை வைத்திருக்கும் இங்கு ஒரு மினி நூலகத்தை ஜெயக்குமார் உருவாக்கி வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “11ம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் வாசிக்கும் எண்ணம் என்னை தூண்டியது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து வருகிறேன். ஒரு நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தை வீணடிக்காமல் 10 வரிகளாவது படித்து விடுவேன். இதனால் எப்போதும் என்னுடன் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த பழக்கத்தில் தான், நான் வேலை செய்கிற பிணவறையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக ஒன்றிரண்டு என வாங்கி தற்போது அது 100க்கும் மேற்பட்ட புத்தகங்களாக உள்ளன. நான் வாசிப்பதை பார்த்து, பல மருத்துவா்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் நேரம் கிடைக்கும் போது வந்து வாசிக்கிறார்கள். மேலும் என்னுடைய வீட்டில் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.
இதற்கு முன் கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்த்த போது அங்கேயும் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எனக்கு புத்தகம் தான் மனைவி பிள்ளைகள் என நேசிக்கிறேன். என்னுடைய இறுதி மூச்சு விடும் வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 1945-ல் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் உள்ளூர் பரமேஸ்வரன் ஐயர் எழுதிய புத்தகம் முதல், தற்போதைய கேரளா அரசு செயலாளர் சிவசங்கர் (தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கூட்டாளியாக இருந்தவர் என குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்) எழுதிய ‘அசுத்தா மாவு வெறும் ஒரு ஆண’ என்ற புத்தகம் வரை வாசித்து விட்டேன்.
இங்கு நான் புத்தகம் வைத்திருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி அங்கு வரும் போது நேரிடையாக வந்து பார்க்கிறேன் என்றார். இளைய தலைமுறையினரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை விட்டுட்டு, புத்தகம் வாசிப்பதில் கொஞ்சம் அக்கரையை செலுத்த வேண்டும்” என்றார்.