இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களவையில் இன்றைய நிகழ்வின் போது காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை குற்றம் சாட்டி பேசினார்.
மேலும் அவர், “பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது” என்று கூறி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதிக்குழு தான். நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை.
அனைத்து மாநிலங்களுக்கும் நிதி குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதி குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எந்தவித பாகுபாடும் காட்டவில்லை” என்று பேசினார்.