இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் நிலவரங்களை ஏற்ப மாற்றியமைத்து வருகின்றனர். எனினும், கடந்த 41 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித விலைமாற்றமின்றி அப்படியே தொடர்கிறது. இருப்பினும், இந்தியாவில் உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அவ்வப்போது உயர்த்தி வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அதன் விலையைக் குறைத்து அறிவித்திருப்பது வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவோரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 187 குறைந்து, ரூபாய் 2,186- க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மே மாதம் ரூபாய் 2,508- க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ஜூன் 1- ஆம் தேதி அன்று ரூபாய் 134 குறைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.