Published on 02/02/2021 | Edited on 02/02/2021
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராடிவரும் நிலையில், அவர்களுக்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள், இன்று மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும், அவை கூடியதிலிருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மாலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஐந்து மணிக்கு மக்களவை கூடியபோதும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதனையடுத்து மக்களவை இரவு 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.