மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் தெற்கு கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில், காரில் போதைப்பொருளோடு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து கிட்டத்தட்ட 100 கிராம் அளவிலான கோக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு வங்க போலீஸார், பமீலா கோஸ்வாமி போதைப்பொருள் வாங்கப்போவதாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததாகவும், அதற்கேற்றார் போல் பெண் அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு பமீலா கோஸ்வாமியை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். பமீலா கோஸ்வாமியோடு சேர்த்து அவரது நண்பர் பிரபீர் குமார் மற்றும் பமீலா கோஸ்வாமியின் பாதுகாவலர் ஆகியோரும் காவல்துறையினரால் சுத்திவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க போலீஸார், மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்ததோடு, அவர்கள் போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜகவின் மாநில செய்தித்தொடர்பாளர். "இதைப் பற்றி எனக்கு இன்னும் எதுவும் தெளிவாக தெரியாது. இருப்பினும், மருந்து அவர்களின் பையில் இருந்ததா அல்லது திணிக்கப்பட்டதா என்பதும் கவலைக்குரிய விஷயம்" எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாஜக இளைஞரணிச் செயலாளர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.