புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று (23/04/2021) இரவு முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், "புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துமனையில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு (O.P) தற்காலிகமாக இயங்காது. கரோனா பரவலை தடுக்கும் வகையில், வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளது. அவசர சிகிச்சைகளைத் தவிர, மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்கான உள் அனுமதியும் நிறுத்தப்படுகிறது. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்." இவ்வாறு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.