அருணாச்சல பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

60 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்து, வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோ கிழக்கு மற்றும் யாசூலி ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினி, யாசூலி தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிர் ஆகிய இரு பாஜக வேட்பாளர்களையும் எதிர்த்து எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யாததால் இவர்கள் இருவரும் போட்டியில்லாமல் வெற்றி பெறுவது தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு ஆட்சி செய்து வந்ததும் பாஜக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.