சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 233 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
அதே சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வியும் எழுந்திருந்தது. இதில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க வென்றுள்ளதால், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து கடந்த 26ஆம் தேதி அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கில்லை எனவும், முதல்வர் பதவி குறித்து பா.ஜ.கவின் முடிவே இறுதியானது என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மகாயுதி கூட்டணியில் உள்ள மூன்று தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுவதால் அம்மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தாமதமாகி வருகின்றது. புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்தது. மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மற்றொரு தலைவரை துணை முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில், பா.ஜ.கவுக்கு சிவசேனா புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சகத்தின் இலாகாவை சிவசேனா வகிக்கும் துணை முதல்வருக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்த போது, இட ஒதுக்கீடு பிரச்சனைகளை தீர்வு காட்டியதையும், மகாயுதி கூட்டணி பேரணிகளை வெற்றியோடு நடத்தியதையும் சுட்டிக்காட்டி இந்த நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. முக்கிய இலாகாக்களை தராவிட்டாம் அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தருவதாகவும் சிவசேனா பா.ஜ.கவுக்கு செக் வைத்துள்ளது. இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஏக்நாத் ஷிண்டே, தனது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று 1 வாரம் ஆன நிலையில், இன்னமும் புதிய அரசு அமைக்க முடியாமல் பா.ஜ.க திணறி வருகிறது.