காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைபயணத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து துவங்கும் இந்த நியாய யாத்திரைக்கான துண்டு பிரசுரங்கள் மற்றும் வலைத்தளத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் இன்று (10-10-24) துவக்கி வைத்தனர். இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு இவ்வளவு அநீதி இழைத்துவிட்டு எப்படி நியாய யாத்திரை நடத்த முடிகிறது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். அசாம் மாநிலத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் பேசிய அவர், “பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுத்தவர் பிரதமர் மோடி. ஆனால், காங்கிரஸுக்கு, அவர்களுடைய ஓட்டுகள் மட்டும் தான் தேவை. அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் நேரு தடுத்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இவ்வளவு அநீதி இழைத்துவிட்டு இப்போது நியாய யாத்திரை நடத்துகிறார்கள்.
சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை காங்கிரஸ் பதவி நீக்கம் செய்தது. இவர்கள் 'நியாய யாத்ரா' நடத்துகிறார்களா? நாளை ஹிமந்த பிஸ்வா சர்மாவின் அரசை யாராவது கவிழ்த்தால் என்ன செய்வது? ராகுல் காந்தி தனது யாத்திரையின் போது இங்கு வரும்போது 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் பற்றி நீங்கள் கண்டிப்பாக அவரிடம் கேட்க வேண்டும்” என்று கூறினார்.