நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதில், ஆந்திரா (25), தெலுங்கானா (17), பீகார் (5), ஜம்மு (1), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா(4), உத்திரப் பிரதேசம்(13), மேற்கு வங்கம்(8), ஜார்க்கண்ட்(4) உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கு இன்று (11-05-24) மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், வரும் 13ஆம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வாரணாசி தொகுதியில் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாத வாக்காளர்களை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.க காரியகர்த்தா வேட்பாளர்களுக்கு வாக்களிக்க நான் ஆதரவளிக்கிறேன். ஏன்? ஏனென்றால், ஏப்ரல் 2020 முதல் லடாக்கின் 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்ற சீனாவை அனுமதித்த மோடி, வெட்கமின்றி அங்கு யாரும் வரவில்லை என்ற பொய்யைச் சொன்னார். இதனால், லடாக்கியர்களுக்கு செம்மறி ஆடுகளை மேய்ப்பதைத் தடுக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.