மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.
இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி பதிலளித்து பேசுகையில், ''எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு துளி கூட அக்கறை இல்லை. 2019 தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்கள் கொண்டு வந்துவிட்டனர்.நாட்டுக்கு நீங்கள் ஏமாற்றத்தை தவிர வேறு எதையும் தரவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன்? ஊழல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.'' என்றார் .
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய பிரதமர் மோடி மணிப்பூர் என்ற பெயரை உச்சரிக்காத நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமரை நோக்கி ''மணிப்பூர்... மணிப்பூர்...'' எனக் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அதன் பிறகு பேசிய பிரதமர் மோடி, ''மணிப்பூர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்போம். மணிப்பூர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்திய நாடும் மக்களும் துணையாக உள்ளார்கள். 1966 மிசோரமில் வான்வழித் தாக்குதல் நடத்தியது காங்கிரஸ் ஆட்சி. பாரத மாதாவை அவமதித்து பேசியது மன்னிக்க முடியாதது (பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என ராகுல் பேசியதைக் குறிப்பிட்டு) தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் தான் பாரத மாதாவை இரண்டாகப் பிளக்க காரணமாக அமைந்துவிட்டன. பாரத மாதா மரணம் அடைய வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். மணிப்பூர் பற்றி விவாதிக்கவே எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றே கொடுத்துவிட்டார். அங்கு அமைதியைக் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்களை விடமாட்டோம். மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார்.