இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சிகள் அமளி, 12 மாநிலங்களவை எம்.பிக்கள் இடைநீக்கம், நாடாளுமன்ற வளாகத்திற்குள் எம்.பிக்கள் போராட்டம் என மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இந்தக் கூட்டத்தொடரிலும் பரபரப்பு நிலவிவருகிறது.
இதற்கிடையே மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இரு அவைகளிலும் எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பதிலளித்துவருகிறது. இந்தநிலையில், மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இது (கிரிப்டோகரன்சி) அபாயகரமான பகுதி. அது முழுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பில் இல்லை. அதன் விளம்பரங்களைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் செபி மூலம் கிரிப்டோகரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளது" என கூறியுள்ளார்.
நேற்றைய பிட்காயின் குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மத்திய அரசு சேகரிப்பதில்லை எனவும், இந்தியாவில் பிட்காயினை ஒரு நாணயமாக அங்கீகரிக்க எந்த முன்மொழிவும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.