பாஜக அரசு 2014—ம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கதை எனும் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,
பொருளாதார வளர்ச்சி வாக்குகளை கொண்டு வராது. கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒளிர்கிறது என்று அரசு சார்பில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை, தோல்வியில் முடிந்தது.
ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக இந்துத்துவா மீதும், ஊழல் இல்லாத அரசு மீதும் நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்தது. அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக வெற்றி பெற இந்துத்துவாதான் துணை புரிந்தது.
2014 தேர்தலின் போது ஆளும் பாஜக அரசு கொடுத்த எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நான் கூறமாட்டேன், ஆனால், நாங்கள் தொடங்கி வைத்த நல்ல திட்டங்கள் மற்றும் அதனுடைய பணியை நிறைவேற்ற மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படுவதால், மக்கள் அந்த வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக நல்ல நிலைமையில் இல்லை. நான் இப்போது நிதிஅமைச்சராகவும் இல்லை. நாட்டில் மக்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.