புதுச்சேரி மாநில பா.ஜ.க நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க தேசிய பொதுச்செயலரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சி.டி.ரவி பா.ஜ.க அலுவலகத்துக்கு வருகை தந்தார். மாநில கட்சி தலைவர் சாமிநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பா.ஜ.கவில் இணைய விரும்பி பல தலைவர்கள், இதர கட்சி எம்எல்ஏக்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். எங்களின் அடிப்படை இலக்கு கட்சியை பலப்படுத்துவதுதான். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழு தோல்வியைடைந்துள்ளது, கரோனா காலத்தில் இது வெளிப்படையாகியுள்ளது.
புதுச்சேரியை தமிழகத்துடன் மத்திய அரசு இணைக்க உள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோல் திட்டம் ஏதுமில்லை. தங்கள் தோல்வியை மறைக்கவே பா.ஜ.க. மீது பொய் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். அதை எப்படி எழுப்புகிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசுக்கு அதுபோல் திட்டமில்லை. மோடியின் தலைமையை ஏற்போருடன் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம். நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் தொடர்பான பிரச்சார வழிமுறைகளை வடிவமைப்போம் எனக் கூறினார்.