பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தினால் கவரப்பட்டு தனி ஆளாக இருந்து கழிவறையை கட்டி முடித்துள்ள 87 வயது மூதாட்டி. ஜம்மு-காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாலி கிராமத்தை சேர்ந்த 87 வயது மூதாட்டி ராக்கி. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜம்மு & காஷ்மீரில் உள்ள கிராமங்களில் கழிவறை கட்ட விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு கழிவறை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது . இதைப்பார்த்த ராக்கி தானும் தனது வீட்டிற்கு கழிவறைகட்ட முடிவு செய்து ஏழு நாட்களில் தனி ஆளாக எவரது உதவியும் இன்றி கழிவறையை கட்டி முடித்துள்ளார். பக்கத்தில் உள்ள அனைவரிடமும் திறந்தவெளியில் கழிப்பதினால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து ராக்கி கூறியது." என்னால் சம்பளத்திற்கு ஆள் வைத்து கழிவறை கட்ட முடியாது அதனால் என் மகனை மணல் எடுத்து வரச்சொல்லி, நான் செங்கல்களை எடுத்து வந்து என் கைகளாலே பூசி ஏழு நாட்களில் கட்டி முடித்துள்ளேன். இதுபோல் அனைவரும் அவரவர் வீடுகளில் கட்ட வேண்டும் திறந்தவெளியில் கழிப்பதால் பல நோய்கள் ஏற்படும்" என்று கூறினார்.
இவரின் செயல்கண்டு உத்தம்பூர் துணை ஆணையர் வியந்துள்ளார். இதுகுறித்து ஆணையர் கூறியது." மக்கள், இதற்கு முன்பு இருந்ததுபோல் இனியும் இருக்க கூடாது. அவர்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். 87 வயதான பெண்மணி ஒருவர் தனியாளாக கழிவறையை கட்டிய சம்பவம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வயதான பெண்மணியிடமிருந்து அனைவரும் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்."