கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தின் எஞ்சினை நிறுத்தியதால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் விமானத்தின் எஞ்சினை நிறுத்தியதால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானில் இருமுறை வட்டமிட்டபடி பறந்த விமானம் திடீரென ஓடுதளத்தின் எதிர்புறத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, விமானி கேப்டன் தீபக் சாத் உடனடியாக விமானத்தின் எஞ்சினை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.