Skip to main content

வருமானவரித்துறை இணையதள பிரச்சனை: இன்ஃபோசிஸ் சி.இ.ஓ.க்கு மத்திய அரசு சம்மன்!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

nirmala seetharaman

 

வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்குப் புதிய வசதிகளைத் தரவும், வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தவும் புதிய இணையதளத்தை உருவாக்க முடிவுசெய்த மத்திய அரசு, அந்தப் பொறுப்பினை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் வழங்கியது. இன்ஃபோசிஸ் நிறுவனம், புதிய வருமான வரித்துறை இணையதளத்தை உருவாக்கி கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.

 

இருப்பினும் இந்தப் புதிய இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும் என தொடர்ந்து உறுதியளித்துவந்த மத்திய நிதியமைச்சர், தொழிநுட்பக் கோளாறுகளை சரி செய்யும்படி தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அறிவுறுத்திவந்தார்.

 

இருப்பினும் புதிய வருமான வரித்துறை இணையதளத்தில், தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்துவருகின்றன. மேலும், நேற்று முன்தினத்திலிருந்து (21.08.2021) நேற்று மாலைவரை இணையதளம் முடங்கியது. இந்தநிலையில், இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டரை மாதங்களாகியும் அதிலுள்ள குறைபாடுகள் களையப்படாதது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்குமாறு இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து புதிய இணையதளத்தில் தொடரும் பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்