ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. பேரம் பேசி வருவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவரும் சூழலில், மத்தியப்பிரதேசத்தைப் போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. முயன்று வருவதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சியிலிருந்து விலகியதால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது. பா.ஜ.க. திட்டமிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து சிவராஜ் சிங் சவுகான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானிலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அசோக் கெலாட், 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி பணம் கொடுத்து ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்கு முன்பணமாக ரூ.10 கோடியும், கட்சியில் சேர்ந்த பின் ரூ.15 கோடியும் தருவதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு மிகப்பெரிய அளவிலான பணம் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கள் எம்.எல்.ஏக்கள் மீது நம்பிக்கை வைத்து தற்போது அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியதுபோல் ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயல்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி இதுகுறித்து ஆலோசிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.