நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாகத் தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அப்போது, கட்சியின் கணக்குகள் முடக்கப்பட்டதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பட அனுமதி வழங்கியது. மேலும், இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டும், இந்த வழக்கு வரும் 21 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்று இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது.