கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக முடிவுக்கு வந்தது. குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவை போலவே, தனி பெரும்பான்மை இல்லாமல் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் மாநிலம் மத்தியபிரதேசம். அங்கு மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியது, இதனை தொடர்ந்து நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் நடந்ததை போல விரைவில் மத்தியபிரதேசத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பாஜக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அம்மாநில அரசியலிலும் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் நேற்று மத்தியபிரதேச சட்டசபையில், குற்றவியல் சட்டமசோதா 2019 மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு சபாநாயகர் பிரஜாபதி நீங்கலாக ஆதரவாக 120 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்களும், 2 பாஜக எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் பாஜக வுக்கு ஆதரவாக மாறலாம் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ க்கள் 2 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக மாற்றி வாக்களித்த 2 எம்.ஏ க்களும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எம்.எல்.ஏ க்கள் இருவரும், தங்கள் தாய் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தங்கள் சொந்த வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.